டிசம்பர் 5, 2021
ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது – முன்னாள் ஊழியர்

ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது – முன்னாள் ஊழியர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விசாரணைக்காக ஆஜரான அவர்,, ஃபேஸ்புக்கை மிக கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், சமீபத்தைய செய்திகள், ஃபேஸ்புக் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்வினையாற்றியிருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

அவர் தன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஃப்ரான்செஸ் கூறும் பல விஷயங்கள் அர்த்தமற்றதாக உள்ளன என்று கூறியுள்ளார். மேலும், ஃபேஸ்புக் தளத்தில் மற்றவர்களை பாதிக்கும் பதிவுகளை எதிர்கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும், வெளிப்படைத்தன்மையை நிறுவுவதற்கும், இது போன்ற முக்கிய பிரச்னைகளை புரிந்து கொள்ளவும் அத்துறையிலேயே முன் மாதிரியான ஆராய்ச்சி திட்டத்தை உருவாக்குவது தொடர்பாகவும் மார்க் சக்கர்பெர்க் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் மன நலன் போன்ற விஷயங்களைக் குறித்து அதிகம் அக்கறை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள மார்க், அந்த கடிதத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். “எங்கள் பணிகள் மற்றும் எண்ணத்தை தவறாக பிரதிபலிக்கும் விஷயங்களை ஊடகங்கள் செய்தியாக்குவதைப் பார்க்கும் போது மிகவும் கடினமாக இருக்கிறது” என்றும் கூறினார்.