மனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.

0
66

மனித உடல் சுகவாசத்துக்கு பழகியது அல்ல.

எந்த உயிரினத்தையும் அதற்கு பரிச்சயமான சூழலில் இருந்து எடுத்து புதிய சூழலில் விட்டால் உடலில் கடுமையான எதிர்வினைகள் உண்டாகும்.

2.5 மில்லியன் ஆண்டுகளாக பனி, வெயில், கட்டாந்தரை, பட்டினி, கடும் உடல்பயிற்சி என சுற்றுசூழலால் செதுக்கபட்டது நம் உடல்.

கடந்த 20 ஆண்டுகளாக ஏசி, கார், நினைத்தபோது நொறுக்குதீனி, சோபா என சமூகம் மாறிவிட்டது.

1980,1990களில் கூட பெரிய கோடீஸ்வரர்கள் வீட்டில் தான் ஏசி , கார் இருக்கும். இன்று மிடில்க்ளாஸ் வீட்டில் ஏசி இருக்கு. தவறு இல்லை. ஆனால் இதனால் எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்துகொண்டிருந்த வியாதிகள் ஏழைகளுக்கும் வருகின்றன.

கவுட் எனப்படும் யூரிக் அமில நோய் முன்பு எகிப்திய மன்னர்களுக்கு மட்டுமே வரும். காரணம் அவர்கள் தான் இறைச்சி+பழம்+தேன்+மது என அனைத்தையும் முன்று வேளையும் எடுப்பார்கள். சாதாரண மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே சிரமம். இன்று கவுட் அனைத்து தரப்பு மக்களுக்கும் வருகிறது.

கரும்பு வெயில் நாடுகளில் மட்டுமே விளையும் பயிர். இஸ்லாமிய நாடுகளுடன் போர் நடந்ததால் சீனத்து பட்டுபாதை அடைக்கபட்டு ஐரோப்பாவில் சர்க்கரை கிடைக்காத நிலை உருவானது. அன்றைய ஐரோப்பாவில் ஒரு அவுன்ஸ் தங்கமும் ஒரு அவுன்ஸ் சர்க்கரையும் ஒரே விலை. கொலம்பஸ் தென்னமெரிக்காவை கண்டுபிடித்ததும் தான் ஏராளமாக சர்க்கரை ஐரோப்பாவில் கிடைத்தது.

பிரான்சும், இங்கிலாந்தும் போரிட்டு போர் முடிவில் ஒட்டுமொத்த கனடா நாட்டையும் இங்கிலாந்துக்கு கொடுத்துவிட்டு மாலத்தீவு சைஸில் இருக்கும் ஹைட்டி தீவை பிரெஞ்சு அரசு வைத்துக்கொண்டது. அப்போது பிரெஞ்சு பத்திரிக்கைகள் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடின. காரணம் கனடா முழுக்க பனி. ஹைட்டியில் கரும்பு விளையும். ப்ரிட்டிஷார் இத்தனை மூட்டாள்களா என அவர்களுக்கு ஒரே சிரிப்பு.

இன்று நாம் உண்ணும் சாக்லெட், சர்க்கரை எல்லாம் முன்பு மன்னர்கள் உணவு.

ஆக தொழில்மயமாக்கல், நாகரிக வளர்ச்சி எல்லாம் சராசரி மக்களை மன்னர்களின் சுகபோகத்துக்கு பழக்குகிறது. மன்னர்களுக்கு மட்டுமே வந்த வியாதிகள் மக்களுக்கும் வருகின்றன.

ஆய்வு ஒன்றில் எலிகளை இரு பிரிவாக பிரித்தார்கள்..ஒரு பிரிவு எலிகளை தினமும் 4 மணிநேரம் குளிர்நீரில் விட்டார்கள். இன்னொரு பிரிவு எலிகளை அப்படி குளிர்நீரில் விடவில்லை. இரு பிரிவு எலிகளுக்கும் விருப்பபட்ட அளவில் உணவு வழங்கபட்டது.

குளிர்நீரில் விடபட்ட எலிகள் சாதா எலிகளை விட கூடுதலாக உணவு உட்கொண்டன. ஆனால் ஆய்வு முடிவில் அவை சாதா எலிகளை விட ஒல்லியாகவும், குறைவான கான்சர் செல்களுடனும், மனித வாழ்நாளில் 9 ஆண்டுகள் கூடுதலாகவும் வாழ்ந்தன.

பயாலஜியில் இதை ஹொர்மியோசிஸ் என அழைக்கிறார்கள்.

கஷ்டத்துக்கு மனித உடல் பழக்கபட்டு, அதன்மூலம் கூடுதல் வலுவை பெற்று நீண்டநாள் உயிர்வாழ்வதுதான் ஹோர்மியோசிஸ்.

சுகபோகம் அப்போதைக்கு நல்லது. ஆனால் அது நம்மை உள்ளிருந்து கொன்றுவிடும்.

கஷ்டம் அப்போதைக்கு வலிக்கும். ஆனால் நீண்டநாள் நோக்கில் நமக்கு நன்மை செய்யும்.

ட்விட்டர் சி.ஈ.ஓ ஜாக் டார்ஸியின்ட இல்லாத பணமா? அவர் தினம் ஒரு வேளை தான் உண்கிரார். காலையில் எழுந்ததும் ஐஸ் நீரில் குளிக்கிறார். உடலை குளிருக்கும், வெயிலுக்கும் பழகபடுத்துகிறார். மலைகளில் ஏறுகிறார்.

பத்திரிக்கைகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றன. ஏன் அவர் இப்படி செய்கிரார் என அவர்களுக்கு புரியவில்லை.

அவர் செய்வதன் பெயர் ஹோர்மியோசிஸ்.

கஷ்டமே நம்மை செதுக்கும் உளி.

சுகபோகம் உள்ளிருந்து கொல்லும் நோய்.

சோபாவை தவிருங்கள்…கீழே அமருங்கள்

பாயில் படுங்கள். உடலை குளிருக்கும், வெயிலுக்கும் பழகப்படுத்துங்கள்.

நடந்து செல்லுங்கள்…உடல்பயிற்சி செய்யுங்கள். உடலை பட்டினிக்கும், உழைப்புக்கும் பயன்படுத்துங்கள்.

அதுவே நம் இயற்கை

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here