மார்ச் 19, 2024
சீனாவில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: 21 பேர் பலி

சீனாவில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: 21 பேர் பலி

சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம் கொண்ட அல்ட்ரா மாரத்தான் போட்டியின்போது அதிவேகமான காற்றுடன் கூடிய உறைபனி மழை பெய்தது. மோசமான வானிலையில் சிக்கி இந்த போட்டியில் பங்கேற்ற சுமார் 172 வீரர்கள் மாயமானதை அடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இந்த அதீத வானிலையில் சிக்கிய பலரும் ஹைப்போதெர்மியா என்னும் திடீர் உடல் வெப்பநிலை குறைவால் பாதிக்கப்பட்டு முடங்கினர்.

மாயமான வீரர்களில் 151 பேர் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள சூழ்நிலையில், அவர்களில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் வெறும் அரைக் கால் சட்டை மற்றும் டி-ஷர்ட்டுகளையே அணிந்திருந்தனர்.

இது தொடர்பாக பேசிய உயிர் தப்பிய வீரர்கள் சிலர், தாங்கள் போட்டிக்கு செல்வதற்கு முன்பே காற்று வீசவும், மழை பொழியவும் வாய்ப்புள்ளது என்பது தெரியும் என்றும், ஆனால் தாங்கள் அனுபவித்த அளவுக்கு மோசமாக அது இருக்கும் என்று துளிகூட நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சரியாக போட்டி தொடங்கிய மூன்று மணிநேரம் கழித்து, வீரர்கள் ஓடிக்கொண்டிருந்த மலைப்பாங்கான இடத்தில் கடுமையான காற்று வீசிய நிலையில், பிறகு வீசிய ஆலங்கட்டி மழையில் வீரர்கள் சிக்கிக்கொண்டதாகவும், இதைத்தொடர்ந்து அங்கு வெப்பநிலை மிகவும் சரிவடைந்ததாகவும் அருகிலுள்ள பயின் நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த மலைப்பாங்கான இடத்திற்கு அருகே அப்போது ஓடிக்கொண்டிருந்த மாவோ சூஷி என்ற வீராங்கனை இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, “அப்போது மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது” என்று கூறியுள்ளார்.