மார்ச் 28, 2024
பெண் வாரிசை ஹெலிகாப்டரில் வரவழைத்து கொண்டாடிய ராஜஸ்தானிய குடும்பம்

பெண் வாரிசை ஹெலிகாப்டரில் வரவழைத்து கொண்டாடிய ராஜஸ்தானிய குடும்பம்

“பெண் குழந்தைகள் மீது பெரும்பாலும் யாரும் பாசம் காட்டுவது கிடையாது. குடும்பத்தில் மகன் பிறந்தால் கொண்டாடுவார்கள். அதுவே பெண் குழந்தை பிறந்தால் பெரிய கொண்டாட்டம் இருக்காது. சில இடங்களில் குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்ததற்காக கோகப்படுவார்கள். சட்டவிரோதமாக கருவிலேயே சிசு ஆணா பெண்ணா என்றும் பரிசோதனை செய்வார்கள். பெண் என தெரிய வந்தால் கருவிலேயே கலைக்கவும் முயற்சிப்பார்கள்”

“இப்படி எதுவும் எனது குடும்பத்தில் நடக்கவில்லை,” என்று தமது குடும்பத்துக்கு மகன் வழியில் பிறந்த பெண் வாரிசு பிறந்த மகிழ்ச்சியை பெருமிதத்துடன் பிபிசியிடம் பகிர்ந்து கொள்கிறார் விவசாயி பிரஜாபத். “எங்களுடைய குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வாரிசு பிறந்துள்ளதை நினைத்து ஆனந்தமாக இருக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார். இவர்களின் குடும்பம் அந்த பெண் வாரிசை வரவேற்ற விதம் சுற்று வட்டாரங்களை பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது.

55 வயதாகும் மதன் பிரஜாபத், ராஜஸ்தானில் உள்ள நாகர் மாவட்டத்தின் நிம்ப்டி சந்த்வாதா கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு 35 வயதும் இளைய மகனுக்கு 21 வயதும் ஆகிறது. இதில் மகனின் மனைவி சுகா தேவிக்கு கடந்த 2ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சித்தி என்று இவர்களின் குடும்பம் பெயர் சூட்டியது. நாகர் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த குழந்தை, சுகா தேவியின் தாத்தா வீட்டுக்கு சம்பிரதாயத்தின்படி அழைத்துச் செல்லப்பட்டது.

ஆனால், அந்த பிஞ்சு மழலையின் முதல் வெளியுலக பிரவேசம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தார் பிரஜாபத். 35 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் வாரிசு என்பதால் அதன் வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். நிம்பாடியில் இருந்து தாய் வழி தாத்தாவின் பூர்விகத்துக்கு பேத்தி வரும்போது அது எதிர்காலத்தில் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று கருதினார் பிரஜாபத். வித்தியாசமாக சிந்தித்தார்.