Home இந்தியா இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!

12
0

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தின் நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை கடந்த ஜூலை 1987 முதல் இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர்களது ஒப்புதலோடு நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ்.கோகலே, தடுப்பூசி செயல்திட்டத்தின் கூட்டு பணிக்குழுவின் 34ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக துறையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் உடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

அக்டோபர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் மேரிலேண்டின் பெதஸ்டாவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தின் வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோணி ஃபாச்சி மற்றும் டாக்டர் ராஜேஷ் எஸ்.கோகலே ஆகியோர் இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டத்தின் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.