Home உலகம் பெண்ணை முழுவதுமாக விழுங்கிய 22 அடி மலைப்பாம்பு… அதிர்ச்சியில் கிராம மக்கள்

பெண்ணை முழுவதுமாக விழுங்கிய 22 அடி மலைப்பாம்பு… அதிர்ச்சியில் கிராம மக்கள்

36
0

இந்தோனேசியாவில் 54 வயதான பெண்ணை 22 அடி நீல மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் உள்ள சுமத்ரா தீவில் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜஹ்ரா (54) என்ற பெண் வேலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடியும் ஜஹ்ரா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று ரப்பர் தோட்டத்துக்கு வேலை சென்ற பணியாளர்கள் அங்கு பெண்ணின் செருப்பு, தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் ரப்பர் எடுக்கும் உபகரணங்கள் ஆகியவை சிதறி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் குடியிருப்பாளர்கள் ரப்பர் தோட்டத்தைச் சுற்றி சோதனை நடத்தியபோது சுமார் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு எதையோ விழுங்கிய நிலையில் நகர முடியாமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது.

இதனால் சந்தேகித்த போலீசார் காணாமல் போன ஜஹ்ராவை இந்த பாம்பு விழுங்கியிருக்கலாம் என்று வனத்துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அதன் பின்னர் நடந்த சோதனையில் ஜஹ்ராவை அந்த பாம்புதான் முழுவதுமாக விழுங்கியிருப்பதை உறுதி செய்து ஜஹ்ராவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஜஹ்ராவின் கணவர் அந்த பாம்பின் வயிற்றுக்குள் மனனவி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். ராட்சத மலைப்பாம்பு ஜஹ்ராவை விழுங்க சுமார் 2 மணி நேரம் எடுத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறியது அங்கிருந்த கிராம வாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மலைப்பாம்புகள், பொதுவாக சிறிய விலங்குகளையே உட்கொள்ளும் நிலையில் மனிதர்களை விழுங்குவது அரிதாகவே நிகழும். கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் உள்ள மூனா தீவில் ஒரு பெண்ணை ராட்சத மலைப்பாம்பு விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து ஒரு வருடத்திற்கு முன்பு, சுலவேசி தீவில் உள்ள சலுபிரோ கிராமத்தில் ஒரு விவசாயியை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் உலக சுகாதார அமைப்பு, ஆண்டுக்கு சுமார் 5.4 மில்லியன் பாம்பு கடி வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கிறது.