மே 24, 2024
தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா? – thirupress.com

தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா? – thirupress.com

தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் கடற் கொள்ளையர்களால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து வெள்ளிக்கிழமை பகலில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் சிவா, சின்னத்தம்பி, சிவக்குமார் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரு ஃபைபர் படகுகளில் அவ்வழியாக வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மீனவர்களை வழி மறித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த படகில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களின் படகில் கத்தியுடன் ஏறிய அடையாளம் தெரியாத நபர் தமிழக மீனவர் படகில் இருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவக்குமாரை அந்த சந்தேக நபர்கள் கத்தியால் தாக்கியதாகவும் அதில் சிவக்குமார் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் படகிலிருந்த சிவா மற்றும் சின்னத்தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படகில் இருந்த 400 கிலோ வலை, திசைகாட்டும் ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்த மர்ப நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய மீனவர்கள் இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாக கரை திரும்பிய மீனவர் சிவக்குமார் தெரிவித்தார்.