மே 24, 2024
இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கி 6 மாதங்கள்: இப்போதைய நிலை என்ன?

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கி 6 மாதங்கள்: இப்போதைய நிலை என்ன?

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் என்று இந்திய அரசு கூறும் முயற்சிகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை ஐந்து சதவிகிதத்துக்கும் சற்று அதிகமானவர்களுக்கே முழுமையாக (இரண்டு டோஸ்களும்) தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தடுப்பூசி பெறுவதற்கான தகுதி உடைய அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி வழங்க வேண்டுமானால் தினசரி 80 லட்சம் முதல் 90 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி வழங்கல் தொடங்கப்பட்ட நேரத்தில், இந்த முயற்சி நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு, புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை தடுப்பூசி விநியோகத்தின் வேகத்தைக் குறைத்தன.

பெரும்பாலான உலக நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள், தடுப்பூசி பெற போராடுகின்றன. ஆனால், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடான இந்தியா இத்தகைய சோதனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு முன்கூட்டியே தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் உண்டான மிக மோசமான கொரோனா இரண்டாம் அலையால் தடுப்பூசி விநியோகத்தைத் துரிதப்படுத்த வேண்டிய சூழல் உண்டானது. தடுப்பூசி பெறத் தகுதியுடைய வயதில் இங்கு சுமார் 100 கோடி பேர் உள்ளனர்.