மார்ச் 19, 2024
இஸ்ரேல் அரபுக் கட்சி ஆதரவுடன் அகற்றப்படும் நெதன்யாகு ஆட்சி – thirupress.com

இஸ்ரேல் அரபுக் கட்சி ஆதரவுடன் அகற்றப்படும் நெதன்யாகு ஆட்சி – thirupress.com

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.

எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்தலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும். அரசு பதவியேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.

கூட்டணி உடன்பாடு குறித்து அதிபர் ரிவ்லினிடம் தெரிவித்து விட்டதாக தாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் லேபிட் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத இஸ்ரேலிய மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். “எதிரணியினருக்கு உரிய மரியாதை அளிப்போம். இஸ்ரேலின் அனைத்துத் தரப்பினரையும் இணைப்பதற்கு ஆவன அனைத்தையும் செய்வோம்” என்று லேபிட் தெரிவித்துள்ளார்.

எதிரணியினரின் கூட்டணி அமைவது சாத்தியமில்லை என்று கருதப்பட்ட நிலையில், லேபிட், பென்னெட் மற்றும் இஸ்லாமிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மன்சூர் அப்பாஸ் ஆகியோர் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திடம் படத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன “இந்த முடிவு மிகவும் கடினமானது. பல சலசலப்புகள் இருந்தன. ஆயினும் உடன்பாட்டை எட்டுவது முக்கியமாகப்பட்டது” என செய்தியாளர்களிடம் பேசும்போது அப்பாஸ் குறிப்பிட்டார்.

“அரபு சமூகத்தின் நலனுக்காக ஏராளமான நல்ல அம்சங்கள் இந்த உடன்பாட்டில் இருக்கின்றன ” என்றும் அவர் கூறினார். வரும் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பென்னெட் பிரதமராக இருப்பார் என்றும் அதன் பிறகு தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் அதிபருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் லேபிட் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் ரிவ்ரின் உத்தரவிட்டிருக்கிறார்.